Friday 23 November 2012

சென்னை ..!

இன்னும் இரண்டரை மாதங்களில் அப்பாவின் கனவு நிறைவேறிவிடும்.. சென்னை பல்கலைகழகதின் முதுகலை பட்டம் தங்கிய என் புகைப்படத்தை அப்பாவும் அம்மாவும் பெருமிதத்துடன் வீட்டு சுவரில் மாட்டக்கூடும். பெண்,குடும்பம்,கலாச்சாரம் இப்படி எந்த அடையாளமுமின்றி எனக்கென்று  ஓர் உலகை அமைத்துகொள்ளும் கனவுடன் இப்பெருநகருக்கு வந்து இரண்டு வருடங்கள்  முடியப்போகிறது. எனக்கான  உலகத்தை கட்டமைப்பதும் அதை களைவதுமாய் நாட்கள் கடந்துவிட்டன, இந்த இரண்டு வருடத்தின் நாட்காட்டி வெறுமையால் நிரம்பிகிடக்கிறது. இலக்கியமும்,அனுபவமும் ,கனவுகளும்,பாடங்களும் அர்த்தமில்லாத சந்தோஷங்களையும்,வலிகளையும் மட்டுமே  பரிசளித்திருக்கிறது. ஒரு போதும் இவை சோறு போடுவதற்கான வழிகளை திறக்கப்போவதில்லை என்பதை நன்கு உணரமுடிகிறது. இருந்தும் இலக்கியமும், எழுதவேண்டுமென்ற ஆர்வமும் பெரும் விலங்காய் என்னை துரதிக்கொண்டேயிருக்கிறது தப்பிக்க வழியற்று ஒடிக்கொண்டேயிருகிறேன். எனக்கான கற்பனை உலகம் என்னை தனிமை படுத்தினாலும், என்னை கடித்து தின்றாலும் கையில் ஏந்தி கொள்வதற்கு என்றுமே  அப்பா தன் கைகளை விரித்தே வைத்திருக்கிறார். எத்துனைத்தான் நான் தனிமையை காதல்கொன்டாலும் மனம் ஒரு நொடியேனும் அப்பா அம்மாவை நினைக்கத்தான் செய்கிறது, அவர்களின்றி என் வாழ்க்கை வெறுமையானதாய் மட்டுமே இருக்கும். நம்பிக்கை சிதைந்துப்போன நிலையில் இதை எழுதிக்கொண்டிருகிறேன். ஏமாற்றம், துரோகம், வஞ்சம், பொறாமை இவைகள் மட்டுமே நிரம்பிய என் உலகில் இன்னும் சிறிதேனும் காதலும், கனவுகளும்  இருக்கவே செய்கிறது. நீண்டக்கால தோழிகள், எதிர்பாராமல் முறிந்த உறவின் காயங்கள், பெயர் சூட்ட முடியா உறவு,மௌனமான காதல், இயலாமையை,கோபத்தை எழுத்து மூலம் வெளிபடுத்தியதால் கிட்டய நண்பர்கள், இலக்கிய வாசிப்பினால் கிடைத்த தோழமைகள், உதவிகள்,  நான் பெண் என்பதால்  மட்டுமே கிடைத்த  உதவிகள் இப்படி எல்லாம் நிறைந்துள்ளது வாழ்க்கை. 
    தனியானான பேருந்துப்பயணம், அதிகாலை கடற்க்கரை, வழி தெரியா சாலையில் தனியாக அலைந்தது, பத்திரிக்கையாளர் எனும் பொய்யான அடையாளத்தைகொண்டு சிற்ப கலைஞன் ஒருவரின் கதை கேட்டது, யாரிடமும் சொல்லாமல் ஒரு நாள் முழுதும் தனியாக மாமல்லபுரத்தில் அலைந்தது,கையில் இருக்கும் காசுக்கெல்லாம் புத்தகங்கள் வாங்கியது. இப்படி நானாய் வாழ்ந்த சில தருணங்கள் நியாபக இடுக்குகளில் படிந்தே கிடக்கின்றன. மிகுதியனா தருணங்களில் நானும் ஓட்ட பந்தய குதிரையாய் எதற்கு ஓடுகிறேன் என தெரியாமல்  ஓடிகொண்டேயிருந்தேன்.  அறை சுவர்கள் என்றைக்கும் கழுத்தை நெரித்து கொண்டே இருக்கின்றன, நான் காதலித்த தனிமை மிக பெரிய எதிரியாக நிற்கிறது.பெண்ணியம் எப்படியெல்லாம் தவறாக புரிந்து கொள்ள முடியுமோ  அப்படி எல்லாம் புரிந்து கொண்ட ஒரு கூட்டதின் பிடியிலிருந்து பிழைப்பதே பெரிய போராட்டமாக இருக்கிறது. ஒரு கலைஞனாகவோ, மனிதனாகவோஇருப்பதை விட பெண்ணாக இருப்பது தான் மிகவும்  கடினமானதாயிருக்கிறது. இலக்கியம் குறித்து சிறிது உரையாடினாலே 'எதிர்ப்பர்புகளும்' திடிர் 'காதலும்'  பிறந்து விடுகிறது. இந்த இரண்டு வருடம் பயத்தை மட்டுமே அம்மாவுக்கு பரிசாய் தந்துள்ளேன். நினைவு தெரிந்த நாள்முதல் மந்திரங்கள் சொல்லி, பூஜைசெய்து வளர்ந்தவள் நாத்திகம் பேசியது அம்மாவுக்கு பெரும் அச்சத்தை கொடுக்கவே செய்கிறது. சென்னை வந்தும் சில நாட்கள் நான் குட்டி விநாயகரும் குங்குமமும் கைப்பையில் வைத்தவாறு சுற்றினேன்.அனுபவங்களும், பெரியாரும்,புத்தகங்களும் கடவுளை தூக்கிவீச செய்தன. திடிரென சாதி பெயரை பெயரிலிருந்து நீக்கியது, சுய மரியாதை திருமணம் பற்றி பேசியது இப்படி அனைத்துமே அம்மாவின் அச்சத்தை அதிகப்படுத்துகிறது, வெளியுலகம் அறியமால் கடவுளும், சாதியுமே பெரும் குறியீடுகளாய் வளர்க்கப்பட்ட அம்மாவுக்கு என செயல்கள் சாத்தானின் செயல்பாடுகளாகவே தெரியும். யார்மீதேனும் காதலோ எனும் அச்சமும் வியக்கத்தகும் செயலல்ல.
    பிறந்து வளர்ந்த கோவையில் கிடைக்கும் சுகாதாரமான காற்றுயில்லை, மரியாதையான பேச்சுயில்லை, அமைதியில்லை, சுத்தமில்லை, ருசியான தண்ணீரில்லை ஆனால் அனைத்தையும் கடந்து ஏதோ ஒரு பெரும் மாயையாய் இந்நகரம் என்மீது படர்ந்துள்ளது.இந்த கூட்டநெரிசல், அழுக்கு, சத்தம் இப்படி எத்துனை இருப்பினும் இதைவிட்டு இன்னொரு உலகை என்னால்அமைக்க இயலாது. இருமையால் நிரம்பிய இந்நகரை நான் ரசிக்ககற்றுக்கொண்டுவிட்டேன், என ரகசியங்களை மௌனமாய் கேட்கும் கடல், காலடி தடங்கள் பதிந்துமறையும் கடற்க்கரை இதை விட்டு வாழ்வது முடியுமா ? தெரியாது,மனிதனுக்கு தேவையெனில் வந்தால் எதுவும் முடியவே செய்யும். ஆனால் நிச்சயம் இனியும் ஒரு அடிமை வாழ்க்கை வாழ்வதற்கு  தெம்பு இல்லை. இலக்கிய வகுப்பில் அமர்ந்து திருட்டு தனமாக எனக்கு பிடித்த இலக்கியம் படிக்கச் வேண்டிய நிலை இனியிருக்கப்போவதில்லை. எதற்கும் உபயோகம் இல்லா மதிபெண்ணுக்காக கிறுக்க வேண்டிய நிலையில்லை. ஆசிரியர்களின் ஆணவத்துக்கு நான் பலியாக வேண்டியதில்லை. நான்மறக்க நினைப்பவை, என்றைக்கும் நினைத்து மகிழ நினைவுகைளும் தந்தது இந்த நகரம்தான்.
    பல்கலைகழகம் அடிமைதனத்தின் வலியை மட்டுமே தந்தது. இரண்டுவருடங்கள் தாக்குபிடித்தமைக்கு இரண்டு ஆசிரியர்களுக்கு நன்றி சொல்லியே தீரவேண்டும். அவர்கள் இல்லை எனில் பல்கலைகழகம் கொடூரம் நிறைந்த சிறைச்சாலையாகவேயிருந்திற்கும். கையில் இருந்த காசையெல்லாம் சிலவு செய்து விட்டதால் சாப்பிடாமல் படுத்தஇரவில் பசியின் வலியை இந்நகரமே முதலில் எனக்கு அறிமுகப்படுத்தியது. தனிமையின் வலியை உணர்த்துவதற்கு பெரிதாக எதுவும் தேவை இல்லை,பழைய நினைவுகளே போதும். எல்லாவற்றுக்கும் ஏங்கி ஏங்கியே இரண்டு வருடம் முடிய போகிறது. இருந்தும் சென்னைதான் மீண்டும் என்னை ஏற்றுக்கொள்ளும். ஒவ்வொரு விடியலும் ஏதோஒன்றை மறைத்து வைத்தே விடிகிறது.எத்துனை விதமான மனிதர்கள்,  எத்துனை  கனவுகள் , எத்துனை கலைகள்...! என் உலகம் உயிர்பெற இன்னும் இரண்டு மாதமுள்ளது. பொய், வஞ்சகம், பொறாமை, ஏமாற்றம் எதுவும் மாறப்போவதில்லை ஆனால் இவை இனி என்னை எதுவும் செய்யாது. அதற்க்கனான திறனை இந்த நகரம் எனக்கு கற்றுத்தந்திருக்கிறது. என் ரகசியங்களையும் கண்ணீரையும் ஏந்தி கொள்ள எனக்கானஒரு வீடு வர போகிறது. எனக்கான அறை, எனக்கான சுவர்கள், என்னை போலவே கனவில் மிதந்துகிடக்கும் என் தோழி, எனக்காக மட்டுமே வாழும் என் அப்பா அம்மா. கலைகளை கற்றுகொள்வே விடியும் சூரியன். யாருடைய  அனுமதியில்லாமல் இரவில் நிலவை ரசிக்க,குழப்பம் இல்லாமல் உறங்க, புத்தகத்தை எல்லாம் என் அறையில் அடுக்க, அம்மாவின் சமையல் சாப்பிட,பிடித்த இடத்திற்கு எல்லாம் அப்பாவை கூட்டி செல்ல.. இப்படி எனக்கான வாழ்க்கையை வாழ....இருந்தும் பெண் எனும் பாத்திரத்தால் இவையனைத்தும் எத்துனை தூரம் சமூகமும், பெற்றோரும் அனுமதிக்கப்போகின்றனர் எனத்தெரியவில்லை. நான் பல்கலைகழகதை விட்டு மட்டுமே வெளியேறப்போகிறேன்...பெண்ணாகவே பாவிக்கப்படுவேன். நம்பிக்கைத்தானே..எப்படி வேண்டுமெனிலும் கனவுக்கானலாம்.

No comments:

Post a Comment