Friday, 23 November 2012

அழிக்கப்படும் நூலகங்களும் வார்த்தையை பின்தொடரும் என் நிழலும் .........


அண்ணா நூற்றாண்டு நூலகம் இடம் மாற்றப்படுவது தமிழ்சமூகத்தின் அறிவார்ந்த பகுதியினரின் நெஞ்சங்களைக் கனலச் செய்துவிட்டது. நான் அந்த நூலகத்தின் சிறப்புகளைப் பற்றி இங்கே பேசப்போவதில்லை. அவை ஏற்கனவே பலமுறை பேசப்பட்ட அழிக்க முடியாத உண்மைகள். ஆனால் இந்த செய்தியைக் கேட்டபோது புத்ததகங்கள் என் அந்தரங்க வாழ்க்கையின் எத்தகைய பாத்திரத்தை வகிக்கின்றன என்பதைத்தான் திரும்பத் திரும்ப நினைத்துக்கொண்டேன். அவற்றை மீள நினைத்துக் கொள்வதன் வழியாகவே ஒரு மகத்தான நூலகம் சீர்குலைக்கப்படும் துயரத்தை என்னால் முழுமையாக உள்வாங்க முடியும்
12 வருடம் கான்வென்ட் டில் படித்ததால் சாப்பிடுவதற்கு முன்பு, படிப்பதற்கு முன்பு, தூங்குவதற்கு முன்பு என்று தனித்தனியாகப் பிராத்தனைகள்  சொல்லும் பழக்கம் சிறு வயதில் இருந்து உண்டு. நடுவில் பெரியாரும், கொஞ்சம் வாழ்க்கை அனுபவமும் கடவுள் மீது வைத்திருந்த நம்பிக்கையைப் பறித்துக் கொண்டு போய் விட்டாலும் பிரார்த்தனைகளை முணுமுணுக்கும்  பழக்கம் மட்டும்  போகவில்லை. கையில் சாப்பாட்டை எடுக்கும் முன்பே our father greatest glory of god என்ற வரி மனதில் ஓடிவிடுகிறது. நாத்திகம் பேசினாலும் பிரார்த்தனைகள் மனதில் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. அதில் எந்த நம்பிக்கையும் இல்லை, அர்த்தமும் இல்லை. எல்லாம் பழக்கம் மட்டும்தான். எத்தனையோ முயற்சிகள். எதுவும் கை கூட வில்லை. இப்படி என்னை  மீறி எனக்குளே ஒன்று செயல்பட்டுக் கொண்டு இருப்பது என் குற்ற உணர்ச்சியை அதிகரித்தது .என் இயலாமையின் உச்சகட்டமாக இருந்தது. ஆனால் என்னை ஜார்ஜ் எலியட்டின் Mill on the Floss ல் வரும் மாகியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஏதோ ஒரு ஆறுதல் கிடைக்கும். சிறு வயதில் இருந்தே கலக குணம்  உடையவளாகி , பெண்மைக்கு உரிய எந்த இலக்கணமும் அவளிடம் இல்லை. அப்பா, குடும்பம், வீடு,தோட்டம்  என்று எல்லாம் இருந்த வரைக்கும் அவளின் சுயம் அவளை விட்டுப் போகவில்லை. எல்லாவற்றையும் இழந்து விட்டு முதன் முதலில் சமுகத்தின் சுட்டுஎரிக்கும் பார்வையில் விழும் போது தான் அவள் சுயத்தை இழக்கிறாள். தோற்றம் மாறினாலும்,  விருப்பத்தை எல்லாம் விட்டுக் கொடுத்து பொறுப்பாக மாறினாலும், அப்பாவின் விருப்பத்திற்கு ஏற்பவே நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் , உள்ளுக்குள் அவள் விருப் பத்திற்கும் , சமுதாயத்தின் எதிர்பார்புக்கும் இடையில் போர் நடந்து கொண்டே இருந்தாலும் அவளின் கலக குணம்  அவளை விட்டுப் போகவில்லை. அவளை மீறி நடக்கிற ஒரு விஷயம் அது. சிறு வயதில் கற்றுக்கொண்டது. என்னிடம் இருப்பது குறை அல்ல. இயல்பு தான் என்று தெரிந்து கொள்ள ஜார்ஜ் எலியட் 704 பக்கங்கள் எனக்கு த் தேவைப்பட்டது.
அப்பாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் குடும்பத்துடன் ஊரை விட்டுப் போக வேண்டிய சூழ்நிலை. வியாபாரத்தில் அவரை யாரோ ஏமாற்றி விட்டார். ஆனால் பழி, கடன் எல்லாம் இவருக்கு. ஒரே இரவில் எல்லாம் தலைகீழாக  மாறியது. அடுத்து அடுத்து வரும் அவமானமும் கேள்விகளும் கற்பனை செய்தே பாதி உடைந்து போனார். பிரச்சினை தலைக்கு மேல் போனதால் உடனே ஊரை விட்டுப் போக வேண்டியதாயிற்று. தன்னை நம்பி இருப்பவர்களுக்கு தன்னால் முடிந்த வரை செய்து விட்டு அன்று இரவே அவரை ரயில் ஏற்றி விட்டு அடுத்த நாள் எதிர்பார்த்த பிரச்சினைகள், எதிர்பாராத பிரச்சினைகளை சமாளித்து விட்டு இரவு தாமதமாக வந்து இருக்கிறார். அவரை எனக்குத் தெரியும் கம்பீரமான மனிதர் ஒரே நாளில் உடைந்து போனதை நினைத்தால் கண்ணீர் முட்டிக் கொண்டு  வந்தது.. ஏன் ஊரை விட்டு ஓடணும்? அவர் தவறு செயவில்லை என்றால் இங்கே இருக்க வேண்டியது தானே என்று எல்லோரும் கேட்கும் கேள்வி  எனக்கும் தோன்றியது.அப்பா ஒன்றே ஒன்று தான் சொன்னார். 'நல்லா வாழ்ந்தவர்கள் என்றைக்கும் தலை குனியக் கூடாது' என்றார். அப்போது எனக்குப் புரியவில்லை. இப்போது அந்த மனிதரை நினைக்கும்போது எல்லாம் 'வேறு வேறு மனிதர்களில்' வரும்  ஜேக்கப் வாத்தியார் ஐயா தான் நியாபகம் வருவார். மிகவும்  கம்பீரமாக வாழ்ந்தவர்.  எப்போதும் அவரைச் சுற்றி மனிதர்கள் இருந்தனர், அவருக்கும் பாராட்டு விழா எல்லாம் நடத்தினர். ஆனால் அவருடைய சர்வீஸ் ரெஜிஸ்டரில்  ஏற்பட்ட தவறால் அவருக்குக்  கிடைக்க வேண்டிய பணம் வராமல் அவர் மனம் உடைகிறார். பார்ப்பவர்களிடம் எல்லாம் தன்னுடைய சர்வீஸ் ரெஜிஸ்டரைப் பற்றியே  பேசுகிறார். எல்லாரும் ஏளனம் செய்து அவரைத்  தவிர்க்கின்றனர். அவரைப் பாராட்டிப் பரிசு அளித்தவர்கள் எல்லாம் இப்போது அவருக்கு மரியாதை தருவது இல்லை. கடைசியாக மன நல காப்பகத்தில் அவரை வலுக் கட்டாயமாகச்  சேர்த்து விடுவர். தன் மனைவியைக் கூட மறந்து போய் அவரிடமே 'மேடம்,  என் பொண்ணுங்க கல்யாணம், எனக்கு ஒரு ஆபரேஷன். எல்லாம் நடந்தாகணும் மேடம். கொஞ்சம் யார்கிட்டயாச்சும் சொல்லி உதவி பண்ணுங்க மேடம்’ என்று அவர் சொல்வது மனதைப் பிளந்து விடும். சமூகத்தில் நன்றாக வாழ்ந்தவர்கள் சிறிய சரிவு ஏற்பட்டாலும் அதுவும் பாதி வாழ்கையைக் கடந்த வர்களுக்கு அது எத்தனை பாதிப்பு ஏற்படும்.பாராட்டு விழா, மரியாதை, தொழில் எல்லாம் இருக்கும் போது நம்முடன் இருக்கும் மனிதர்கள் இவற்றை எல்லாம் இழந்தால் இருக்க மாட்டார்கள், வளர்ச்சி எப்படி படிப்படியாக இருக்க வேண்டுமோ அப்படியே தான் வீழ்ச்சியும் இருக்க வேண்டும். திடீர் என்று எலாவற்றையும் இழக்கும் ஒருவர் மனம் எப்படி உடைந்து போகும் என்பது கற்று தந்தது ஜேக்கப் வாத்தியார்தான். அவர்கள் உடைந்து போவதற்குக் காரணம் அவர்கள் நம்பும் கடவுள். அவர் தரும்போது ஒவ்வொன்றாகத் தான் தருவார் ஆனால் எடுக்கும் போது எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வார். வரட்டுப் பிடிவாதத்தை விட எதார்த்தம் எத்தனை முக்கியம்! 'நல்லா வாழ்ந்தவர்கள் என்றைக்கும்  தலை குனியக் கூடாது' என்ற வரிகளின் வலிமையைப் புரிந்து கொள்ள பவா செல்லதுரையின் நான்கு பக்க எழுத்துகள் எனக்குத் தேவை.
பரீட்சையில் fail  ஆகும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதைக் கேட்டால் பாவமாக இருக்கும். அப்போது தெரியவில்லை 'பாவப்படுவது' தான் காரணம் என்று. Don 't Call it Suicide ல்  பெயர் இல்லாத ஹீரோதான் நினைவுக்கு வருகிறார். அவரால் தன் தம்பி தங்கையைப் போல் படிப்பிலும் மற்றவற்றிலும் சிறப்பாக இருக்க முடியவில்லை. இருப்பினும் அவருடைய அப்பா அவரை நன்றாகவே பார்த்துக் கொள்கிறார். இருப்பினும் ஏதோ ஒரு விரதத்தில் அவர் தற்கொலை செய்து கொள்கிறார். அப்பாவிற்கு ஒன்றும் புரியவில்லை. நாம் நன்றாகத் தானே பார்த்துக் கொண்டோம்.  பிறகு ஏன் மகன் இப்படி ஒரு முடிவு எடுத்தான் என்று குழம்புகிறார். இறந்து பல வருடம் ஆனாலும் அப்பாவால் மறக்க முடியவில்லை. மகனுக்குத்  தேவையானவை எல்லாம் செய்தேன், ஏன் என் மகன் அப்படி செய்தான் என்று நண்பரிடம் கேட்கிறார். அவர் மூலம் அப்பா தெரிந்து கொள்கிறார். மகனுக்கு அன்று  தேவைப்பட்டது 'டாலரன்ஸ் அல்ல, லவிங் அக்செப்டன்ஸ் என்று.. ! மனிதனை சகித்துக் கொள்வதற்கும் ஏற்று கொள்வதற்கும் எத்தனை வித்தியாசம்! இதைப் புரிந்து கொள்வதற்கு எனக்கு நிசிம் எசகியலின் 48 பக்கங்கள்  எனக்குத் தேவை பட்டது.
கொலை செய்யப்பட்டவன் அனுபவித்த கொடுமை ,வலியை விட கொலை செய்தவனின் மனது அதிகமாக கொடுமையும் வலியும் அனுபவிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள  ரஸ்கோல்நிகோவ்......!தேவைப்பட்டான். எத்தனை பெரிய பாரத்தையும் துயரத்தையும் இறக்கி வைக்கலாம்.  நாம் அனுபவிக்கும் வலியை உணர்ந்துகொள்ள சோனியா போல் ஒருத்தி இருந்தால். குற்றம் புரிந்தவர்களையும் நேசிக்க  தஸ்தாயெவ்ஸ்கி யின் 576 பக்கங்கள் உடைய குற்றமும் தண்டனையும் எனக்குத் தேவைப்பட்டது.
கடந்த கால ஏமாற்றங்கள் எதிர்கால எதிர்பார்ப்புகள் இவற்றை எல்லாம் நடுத்தரக் குடும்பத்தினர் சுமக்க முடியாது , அன்றைய தின வாழ்க்கையைப் பற்றி மட்டுமே  சிந்திக்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள புதுமைப்பித்தனின் 'ஒரு நாள் கழிந்தது' தேவைப் பட்டது. தன்னை மீறி நடக்கும் ஒரு விபத்துக்கு   ஒரு போதும் பெண் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ள ஜெயகாந்தனின் அக்னிப் பிரவேசம் தேவை ப்பட்டது. திருநங்கைகள் நம்மை அதட்டிக் காசு வாங்குவதற்கும் , விபசாரத்துக்கு போவதற்கு நாம் தான் காரணம். சமூகம்தான் அவர்களை அதில் தள்ளி விட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு 'பால் சுயம்பு வின் ‘திருநங்கை அதிர்ச்சியும் அதிசயமும்'  தேவை ப்பட்டன  . வீடு, உறவுகள். வாழ்ந்த நாடு எல்லாவற்றையும் வேறு வழி இல்லாமல் விட்டு போனவர்களின் வலியை புரிந்து கொள்ள தமிழ் நதியின் எழுத்துகள் தேவை பட்டது. காதல் தரும் அழகிய உணர்வுகளை அனுபவிக்க தாகூரின்ன் சாருலதா தேவைப்பட்டது. சிறு வயதில் ஏற்படும் காதல், ஊடல், இவற்றை அனுபவிக்க மார்க் ட்வைனின்  தாம் சாயர் தேவைப் பட்டது. எத்தனை திமிராகப் பேசினாலும், ஆணைப் போல் சேலையை மடித்துக் கொண்டு நடந்தாலும் பெண்ணும் அவள் உணர்வுகளும் அழக தான் என்பதைத் தெரிந்து கொள்ள  ஜமீலா தேவைப்பட்டாள். எத்தனை கொடூரமான மனிதனிடமும் ஒரு ஓரத்தில் மனிதம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள 'ஒரு மனிதன் பிறந்தான்' என்ற கதை எனக்குத் தேவைப்பட்டது. காதலைப் போன்று அழகான உணர்வு எதுவும் இல்லை என்பதற்கு ரோமியோ ஜூலியட், ஆர்பியஸ் ஆர்பியஸ்   வெண்ணிற இரவுகள், ப்ரைடு அண்ட் ப்ரெஜுடிஸ், ஜேன் எயர், வுதேரிங் ஹைட்ஸ் தேவைப் பட்டது. தொலைத்த குழந்தைப் பருவத்தை மீண்டும் மீண்டும் அனுபவிப்பதற்கு லிட்டில் வுமன் தேவைப்பட்டது. வட்டார மொழியின் அழகை ரசிக்க நாஞ்சில் நாடன், உண்மையான புரட்சியைப் புரிந்து கொள்ள  சேகுவேரா வின் வாழ்க்கை காவியமும், உண்மையான வறுமையைத்  தெரிந்து கொள்ள புதுமைப் பித்தனின் வாழ்க்கை புத்தகமும் எனக்குத் தேவை ப்பட்டது. என்னை முழுமையாக உணரவைக்க, என்னை மகிழ்விக்க, என்னை மீண்டும் மீண்டும் இந்த உலகத்தில் பிறப்பு எடுக்க, புது ஒரு உலகத்திற்குச் செல்ல, என்னை மறப்பதற்கு, என்னுடன் உரையாடுவதற்கு , எல்லாவற்றுக்கும்  புத்தகங்களைத் தவிர எனக்கு வேறு துணையில்லை.

                                                                                                                     

No comments:

Post a Comment