இப்போதெல்லாம் புதிய புத்தகங்களை தேடி படிப்பதை விட பழைய புத்தகங்களை தேடி செல்வதே மனம் விரும்புகிறது. மறுவாசிப்பு புதிய புதிய அர்த்தங்களை தருகிறது. வாழ்கையை புதியதொரு கோணத்தில் காட்டுகிறது. நான் சமீபகாலத்தில் பெறும் அனுபவங்கள், வலிகள் எல்லாம் சில கதாபாத்திரங்களை நினைவு படுத்திகிறது. அப்போது தூரமாக நின்று வாசித்தேன். இப்போது மனதில் வைத்து கொண்டாடுகிறேன். அப்போது நான் அவர்களை பல கேள்விகளுக்கு உட்படுத்தினேன். இப்போது முழுமையாக ஏற்றுகொள்கிறேன். அப்போ தெரியவில்லை நானும் ஒரு நாள் அவர்களாக மாற கூடும் என்று.
post - independence யில் வெளி வந்த நாடகங்களில் , கிரிஷ் கர்னாடு ( Girish Karnad ) மோகன் ராகேஷ்( Mohan Rakesh ) தாரம்விர் பாரதி ( Dharamvir bharathi ) மொஹிட் சட்டோபதே (Mohit Chattopadhyay ) ஹரின்றநாத் சட்டோபதே( Harindranath Chattopadhyay ) திலிப் குமார் ராய் ( Dilip Kumar Roy ) தி பி கைலாசம் ( T P Kailasam ) வி வி ஸ்ரீநிவாஸ் ஐயங்கார் ( V V Srinivas Iyengar ) குறிப்பிடதக்கது. பெண் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் பாரதி சாராபாய் ( bharathi Sarabhai ). இவரின் Well of the People மற்றும் Two Women என்ற நாடகம் மனிதர்களிடம் மனித உணர்வை விட சாதி உணர்வு அதிகமாக இருப்பதையும், கலாச்சாராம் என்ற பெயரில் பெண்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதையும் கவிதையாக வர்ணிக்கும்.
என் மனதுக்கு மிகவும் நெருங்கியவர் நிசிம் எசிகள் ( Nissim Ezekiel ) இவருடைய Dont Call it Suicide என்ற நாடகத்தின் காட்சிகள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறது. இதில் வரும் முக்கிய கதாபாத்திரத்துக்கு பெயர் இல்லை. என்னினும் இவனில் இருந்து தான் கதை தொடர்கிறது. இவன் இறந்து சில ஆண்டுகள் ஆயிற்று. இவனின் நினைவுகள் வாழ்ந்து கொண்டுயிருக்கும் தன்னுடைய அப்பா நந்தா வை கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறது. அவனால் தன் தம்பி தங்கையை போல் நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை. குறைந்த சம்பளத்துக்கே வேலை கிடைக்கிறது. கல்யாணமாகி சில ஆண்டுகளிலே தற்கொலை செய்து கொள்கிறான்.
இவனின் நினைவுகள் வரும்போதெல்லாம் நந்தா மிகவும் வேதனை அடைகிறார். புரிந்து கொள்ள முடியாத குற்ற உணர்ச்சியும், பிரிவின் வலியும் ஒன்றுகலந்து வந்து அவரை நிலை குலைய செய்கிறது. அவனின் நினைவுகளை மறந்து நிகழ காலத்திலே மட்டும் வாழ்பவர் தன் மனைவி திருமதி. நந்தா ( தற்கொலை செய்து கொண்டவனுக்கு பெயர் இல்லாமல் இருப்பது கூட பெரிதாக தெரியவில்லை ஆனால்ஒரு பெண் அதுவும் மன வலிமை அதிகம் உள்ள பெண்ணுக்கு ஏன் இதில் பெயர் இல்லைஎன்று தெரியவில்லை வெறும் திருமதி. நந்தா என்றே அழைக்கபடுகிறார்) நந்தாவிற்கு தன் இறந்த மகனின் நினைவு வராமல் இருக்க பாடுபட்டு கொண்டே இருக்கிறார். மகனின் சாவை பற்றி வீட்டில் பேசுவதை தவிர்க்கிறார். நந்தா வோ தன் மகனின் சாவை பற்றி யாரிடமாவது பேச வேண்டும் என்று ஏங்குகிறார்.
தன்னுடைய நெருங்கிய நண்பர் சத்தே (sathe ) வீட்டுக்கு வருகிறார். தன் மனைவியின் எச்சரிக்கையை மீறி தன் மகனை பற்றி சத்தே விடம் பேச முயற்சி செய்கிறார். தன் கேள்விகளுக்கு பதில் சொல்ல சொல்லி கெஞ்சுகிறார். தன் மகனை நன்றாகவே பார்த்து கொண்டேன். படிப்பும் வேலையும் பெரிதாக இல்லாத போதிலும் எவ்விதத்திலும் குறை வைக்கவில்லை. நல்ல இடத்தில் கல்யாணம் செய்து வைத்தோம் பின் ஏன் அவன் தற்கொலை செய்து கொண்டான்? நான் எதாவது தவறு செய்து விட்டேனா என்று பல கேள்விகள் முன்வைக்கிறார்.
சத்தே மிகவும் தயங்கி விளக்கம் சொல்லுவார். All human beings needs loving acceptance and not just tolerance . எத்தனைஅற்புதமான வரி! சகித்து கொள்வதற்கும் முழுமையாக ஏற்று கொள்வதற்கும் வித்தியாசங்கள் உண்டு. நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்மை சகித்து கொள்ள கூடியவர்களாக இருக்க கூடும் ஆனால் நம்மை முழுமையாக ஏற்று கொண்டார்களா என்றால் விடை தெரியாத கேள்வியாகவே இருக்கும். நாமும் பல பேரை சகித்து கொள்கிறோமே தவிர யாரையும் ஏற்று கொள்ள முயற்சி செய்வது இல்லை. வாழ்கையில் தோல்வி அடைபவர்கள் எதிர்பார்ப்பது சக மனிதர்கள் அவர்களை ஏற்று கொள்வது தான். சகித்து கொள்வது அவர்களை மேலும் துயரத்துக்கு இழுத்து செல்லும். இந்த உண்மையை உணர்ந்த நந்தா தூக்க மாத்திரை சாப்பிட்டு உயிரை விடுகிறார். இந்த நாடகத்தின் கடைசி வரி மட்டுமே பல கேள்விகளை கேட்க தோன்றும். திருமதி நந்தா ,தற்கொலை செய்து கொண்டவனின் மனைவி மாலினி யை கட்டிபிடித்து ..'oh ! my dear child ' என்கிறார். அதோடு நாடகம் முடிகிறது.
நந்தா இருக்கும் வரை மாலினியை ஒரு பொருட்டாகூட மதித்தது இல்லை. அவளுக்கு படிப்பு அறிவு இல்லதானால் தன் உழைப்பில் வாழ முடியவில்லை. அவளின் வீட்டுக்கு சென்றால் தன் நிலையை எண்ணி பெற்றோர் தினம் தினம் வருத்தபடுவார் என்று அங்கேயும் செல்ல முடியவில்லை. அவளை எப்போதும் ஒதுக்கியே வைத்திருப்பார். ஒரு போதும் அவர்கள் ஒன்றாக சாப்பிட்டது இல்லை. நந்தாவின் மரணம் அந்த ஒரு நொடி அவள் மனதில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. கணவன் இறந்து விட்டார் என்பதை உணர்ந்த அவள், அடுத்த நொடி மாலினியை மகளே என்று அணைத்து கொள்கிறார். தான் உயிருடன் இருக்கும் போதே கணவன் தற்கொலை செய்து கொள்வதனின் வலியை உணர்ந்ததாலோ, தன்னுடைய இயலாமையின் காரணமாவோ மாலினியின் நிலை அவளுக்கு புரிந்து இருக்க கூடும். ஆனால் அந்த ஒற்றை நொடி பெரிய மாற்றத்தை கொண்டு வருகிறது.
நான் முதன் முதலில் படித்த போது பெயர் இல்லாத அவன் மீது கோவம் வந்தது. முதல் காரணம் தன்னை நம்பி வந்த அந்த பெண்ணை விட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டானே அவளை பற்றி நினைத்திருக்க வேண்டாமா, படிப்பும் சம்பளமும் மட்டும் ஒருவனின் வாழ்கையை தீர்மானம் செய்ய முடியுமா? எதற்காக தற்கொலை செய்துகொண்டான் என்று. கேள்விகள் தான் எத்தனை சுலபமாக வருகிறது. ஏனோ அவனின் சிந்தனைகளை மன அழுத்தத்தை அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை.
இப்போ ஏதோ ஒன்று என் மனதை அழுத்துகிறது. சத்தே வின் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் படிக்கிறேன். நந்தாவின் மகன் இயல்பகாவே அதிகம் யாருடனும் பேசாதவன். படிப்பு இல்லை என்றால் என்ன. வாழ்கை க்கு அது தேவை இல்லை என்று சொல்வது சுலபமாக இருக்கிறது. ஆனால் அதை நம் சமூகம் ஏற்று கொள்கிறதா? நாம் எதையாவது ஒன்று இந்த சமூகத்திற்கு வெளிப்படுத்தி கொண்டே இருக்க வேண்டும். பட்டாம்பூச்சியை தான் நம்மால் ரசிக்க முடியும் அது பட்டாம்பூச்சியாய் ஆகுவதற்கு முன்பு இருந்த வடிவத்தை ஆங்கிகாரம் கொடுத்தது இல்லை. மதித்ததும் இல்லை. குறைகளை நாம் ஏற்று கொள்வது இல்லை. இதில் நிசிம் எசிகள் ( Nissim Ezekiel ) உன்னதமான உண்மையை உணர்த்துகிறார். படிப்பும் வேலையும் மட்டும் அவன் வாழ்வை முடித்து கொள்ள காரணம் இல்லை. அவனுக்கு வாழ்வின் மீது நம்பிக்கை வருவதற்கு, தன் எண்ணங்களை வெளிபடுத்துவதற்கு அவனிடம் எந்த ஒரு கலையும் இல்லை. வாழ்வின் மிக ஆழமான துயரங்கள், வலிகள் எந்த ஒரு மனிதனும் சக மனிதனிடம் தனியாக சொல்லியது இல்லை. அதனின் வலிமையை ஓவியமாகவும், எழுத்தாகவும், சிற்பமாகவும் ஏதோ ஒரு கலை வடிவத்தில் இருக்கிறது. மரணத்தை வெல்ல கூடிய சக்தி கலைகளிடம் இருக்கிறது.
படிப்பை முடித்து பல கனவுகளுடம் புதிய உலகத்திற்கு நான் கால் எடுத்து வைத்த போது தெரியவில்லை ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் என்று. சூழ்ச்சிகள் நிரம்பிய இந்த உலகதில் நான் பற்றி கொள்வதற்கு, மனதுக்கு ஆறுதல் தர இருந்த ஒரே ஜீவன் புத்தகங்களும் ஓவியங்களும் தான் இங்கே அறிவுக்கு கும் , பற்றுக்கும் எந்த மரியாதையும் இல்லை, மீண்டும் அடிமை படுத்தவே வலை விரித்து உள்ளனர். கொள்கைகள், ஆசைகள், கனவுகள் ஒரு போதும் நமக்கு சோறு போடாதே .எதார்த்தத்தை ஏற்று கொண்டு, அதே வலையில் தானாகவே விழ நேரிடும் வலி வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒன்று. வலையில் இருக்கும் சிறிய சிறிய ஓட்டைகளே கலைகள் ஆகும். அதன் மூலமாக தான் சுவாசிக்க முடிகிறது. அந்த கலை என்ற சுவாசம் இல்லை என்றால் என் நிலையும் அந்த பேர் தெரியாதவனின் நிலையையாக தான் இருந்திற்க கூடும். எல்லாவற்றையும் ஏதோ ஒரு சந்தற்பத்யில்தொலைத்து விட்டு, உலகத்திற்காக நம் இயல்புகளை மாற்றி கொண்டு வாழ்பவர்களை எல்லாம் வாழ வைப்பது கலை மட்டுமே.
என்னை போன்று ஒருவளை புத்தகத்தில் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன், கண்ணீர் சிந்துகிறேன், எனக்குள்ளே சிரித்து கொள்கிறேன், என்னால் மட்டுமே உணர முடியும் என்று நான் நம்புவதை அவளுடன் பகிர்ந்து கொள்கிறேன். என் கோவத்தை காகிததில் எழுதி தீர்த்து கொள்கிறேன். என் உடைந்த கனவுகளை வண்ணங்களாக தீட்டி அது மீண்டும் உயிர் பெற்று விட்டதை போல் பொய்யாக மகிழ்கிறேன். Frida போன்றவரின் வாழ்கையை படித்து ஏதோ ஏதோ நம்பிகையை வளர்த்து கொள்கிறேன்.
ஏனோ அவனுக்கு தன் வலியை வெளிபடுத்த எந்த வழியும் இல்லாமல் போயிற்று. அவனுக்கு எந்த கலையும் கைகொடுக்க வில்லை தன் இயல்பை ஏற்று கொள்ள மறுத்த இந்த உலகதினரிடம் எதிர்பார்பதற்கும் நம்பிக்கை வைப்பதற்கும் என்ன இருக்க முடியும். என் சுயத்தை அழித்து கொண்டுஉணர்வகள் அற்று வாழ்ந்து இருக்கும் போதும் கலைகள் மூலம் என் சுயம் வெளியே வருகிறது. அவன் சுயத்தை அழிபதற்கு உலகமே காத்து கொண்டிருக்கும் போது அவன் தற்கொலை செய்து கொண்டது எனக்கு இப்போது வியப்பாக இல்லை. கோவம் இல்லை. என்னை மாதிரி ஒருவன் கரைந்து போனதை நினைத்து கண்ணீர் மட்டுமே தேம்பி நிற்கிறது.
No comments:
Post a Comment