Friday 23 November 2012

நிலாவிற்கு என் முத்தங்கள்...

குழந்தைகளுடன் இருக்கும்போதெல்லாம் நான் குழந்தையாகவே மாறிப்போகிறேன், இதை தாண்டி வாழ்வில் வேறு ஏதும் தேவையில்லை என்றே தோன்றுகிறது. சில நேரங்களில் என் குழந்தைகளைப் பற்றிய சிந்தனைகள் தோன்றி மறையும்.என் பிள்ளையின் எதிர்காலம் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பும் அதனுடே கலந்த பயமும் பெரும் குழப்பங்களை விளைவிக்கும். ஆனால் நிச்சயம் அழகான ஒரு உலகத்தை அமைத்து தர வேண்டும் என்ற ஆசை எப்போதுமே மேலோங்கி உள்ளது.குழந்தையை வளர்ப்பது, அது வளர்வதை ரசிப்பதை விட வேறு சிறந்த அனுபவம் உலகில் உண்டா என்பது எனக்கு தெரியவில்லை. எது எப்படியாயினும் குழந்தைகள் உலகில் கலந்துவிட எப்போதுமே துடிக்கிறது மனம். ஆனால் வாழ்க்கை எப்போதும் முரண்பாடுகளால் நிரம்பிகிடக்கிறது. நாம் எதிர்பார்க்கும் எல்லாமே எப்போதும் நடந்துவிடுவதில்லை. எனக்கு பிடிக்கும் அத்துணையும் என் காதலனுக்கும் பிடிக்கும் என்று நிச்சயமில்லை. பெற்றோர்களின் ஆசைகளும் கனவுகளும் நம் கனவுகளின் எதிர் திசைகளிலே பயணிக்கும். திருமணம் என்ற கட்டமைப்பை வெறுக்கும் எனக்கு குழந்தை வளர்ப்பு பற்றிய ஆசை பெரும் காதலாய் மனம் முழுதும் நிரம்பிக்கிடக்கிறது. திருமணத்தை பற்றி நம் சமூகத்தில் இருக்கும் எதிர்பார்புகளும் எண்ணங்களும் அபத்தமாகவே தெரிகிறது,உண்மையில் அவை அபத்தமே. நீங்கள் காதல் திருமணம் தான் செய்து கொள்ள போறீர்களா எனும் கேள்வி முன்வைக்கப்படும் போதெல்லாம் என் கோபம் அதிகரிக்கிறது. எப்படி காதல் இல்லாமல் அல்லது காதலிக்கப்படாமல் ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடியும்.

"கால காலமாக செய்து வருவது தானே,அவர்கள் எல்லாம் வாழவில்லையா?" என்ற என் கேள்விக்கு "அவர்களை போல் நான் ஏன் வாழ வேண்டும்" எனும் கேள்வியை நானே பதிலாகவும் தருகிறேன், ஒரே ஜாதி, ஒரே குலம் , ஒரே பழக்க வழக்கம் உடையவர்கள், பணம், நல்ல குடும்பம் இவை மட்டுமே திருமணத்துக்கு போதுமானது என்று நினைத்தால் 'திருமணம்' என்ற ஒரு கட்டமைப்பு பெரிதாக தோன்றாது அதில் பிரச்சனைகளோ மாற்று கருத்துகளோ வருவதற்கு வாய்ப்பில்லை. இவை எல்லாம் மீறி வாழ்க்கை முழுவதும் ஒருவரை முழுமையாக ஏற்று கொண்டு,நம் சுயத்தை அழித்து கொள்ளாமல், காதல் நிரம்பிய காமம் கொண்டு, நான் பெறும், தரும் முத்தங்கள் எல்லாம் உடலை மட்டும் சேராமல் ஆத்மாவிற்கு சென்றடைய வேண்டும் என்ற பைத்தியகாரமான எண்ணங்கள் தோன்றும் மனிதர்களுக்கு இச்சமுக நடைமுறையில் செயல்படும் திருமணம் அடக்குமுறைகளும், வன்முறைகளும் நிரம்பிய அதிகார அமைப்பாகவோ அல்லது பெரும் சுமையாகவோ தான் இருக்க முடியும்.

யாருமே இல்லாத வீட்டில் கூட பெண் கதவை சாத்திக்கொண்டு குளிக்கும், உடைமாற்றும் இந்த சமுகத்தில், இருபது வருடங்கள் தனக்குள் தோன்றும் காதல், காமம் என்று எல்லா உனார்வுகளையும் அடக்கிக்கொண்டு திருமணம் எனும் பெயரில் அனுமதி பெற்ற விபச்சாரம் செய்ய தன் கன்னித் திரை கிழியாமல் பாதுகாத்து, அதற்கு கற்பு, கன்னிமை எனும் பெயர்கள் சூட்டி (பத்தினி தெய்வங்கள் என்று சொல்லப்படும் கண்ணகியை, சீதையை துணைக்கு அழைத்து) யார் என்று அறியாத கணவன் என்று சொல்லப்படும் ஒருவனுக்கு ஏதும் தெரியாதா ஒரு இரவில் தன் உடலை அவனின் இச்சைகளுக்காய் தாரைவாக்க வேண்டியுள்ளது.
பையனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை.மது அருந்த மாட்டான், புகை பிடிக்க மாட்டான் நல்ல பையன் என்று சொல்லி திருமணம் செய்து வைப்பது கொடுமையாக இருக்கிறது. மதுவை ஒருமுறையாவது சுவைத்து பார்த்து விட்டு அந்த பழக்கத்தை விட்டவனை புரிந்து கொள்ள முடியும் ஆனால் ஒரு முறை கூட மது அருந்தியது இல்லை, புகைத்ததில்லை, பொய் சொல்லியதில்லை என்று சொல்லப்படுபவனிடம் என்ன அனுபவங்கள் இருந்து விட முடியும்? ஒரு முறை கூட பொய் சொல்லாமல், ஒரு முறை கூட ஏமாற்றாமல், ஒரு முறை கூட தோற்று போகாமல், ஒரு முறை கூட விட்டுக்கொடுக்காமல், ஒரு முறை கூட வாழ்விற்கும் தற்கொலைக்கும் இடையே உள்ள வெறுமையில் வாழாத, ஒரு முறை கூட காதலிக்காத ஒருவனிடம் என்ன அனுபவம் இருக்க முடியும்? வாழ்வு குறித்தான ஆனந்தமும், அனுபவமே இல்லாதவனிடம் கூடி வாழ்வதை விட அனுபவமும், மது மீதேனும் காதலும்,ஆனந்தமும் கொண்ட குடிகரானுடனே வாழ்ந்து விடலாம்.அவனிடம் தான் எத்தனை கதைகள் இருக்கும். லட்சங்களும், கோடிகளும் நிரம்பிய ஒருவன் நேசிப்பதை காட்டிலும் பலகோடி முறை அதிகமாய் வாழ்வை அனுபவிக்கும் குடிகாரனிடம் காதல் நிறைந்து கிடக்கும்.

நல்லவன் என்று எதை எல்லாம் சமூகம் உருவாக்கி வைத்துள்ளதோ அது எல்லாம் அர்த்தமற்றதாகவே தெரிகிறது. அதே வேலை சமுக தலத்தில் தவறு என்று கட்டமைக்கப்பட்டிருக்கும் "காதல் திருமணம்" எல்லாவற்றுக்கும் தீர்வாகிவிடாது.காதல் எனும் அற்புதமான உணர்வு பொதுவாய் நம் சமுகத்தில் "வெற்றி, தோல்வி" என்று இரண்டு நிலைகளில் குறுகி நிற்கிறது, அன்பில் எப்படி வெற்றி தோல்வி இருக்க முடியும். அண்பு என்பதே வெற்றி தோல்விகளை, உண்மை பொய்களை கடந்ததுதானே. வெற்றி தோல்விகளில் குறுகி நிற்கும் காதல் எந்த சுதந்திரத்தை பெண்ணுக்கு தரும். பெற்றோர் மாப்ளை பார்த்து செய்து வைக்கும் திருமணமோ, காதல் திருமணமோ எதுவாகினும் திருமணமானவுடன் பெண்களின் கனவுகள்,ஆசைகள், ஒரு பெண்ணின் சுயம் என்று அனைத்தும் அவள் மீது திணிக்கப்படும் மனைவி, தாய்மை என்று உணர்சிகள் நிரம்பிய சமுக பின்பதால் சிதைக்கப்படுகிறது. உலகத்தில் அதிகமான வன்முறைகள் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராகவே நடக்கிறது அதுவும் குடும்ப வன்முறைகள் சொல்லி முடியாமல் நீண்டுக்கொண்டே போகும். யாரென்றே தெரியாதா ஆண்கள் செய்யும் பாலியல் வன்முறைகளை காட்டிலும் கணவன் எனும் உரிமையில் நடக்கும் பாலியல் வன்முறைகள் அதிகம் நடைப்பெறும் சமுகம் இது. திருமணம் என்ற அமைப்பின் மீது நமக்கு இருக்கும் கற்பனைகளும், புரிதலுமே இத்துணை கொடூரங்களுக்கும் காரணம். திருமணத்தை பற்றிய கருத்துகள் தெரிவிக்கும் போதெல்லாம் நான் பெண்ணியவாதி என்று சொல்லப்படுகிறேன். நம் சமுகத்தில் பெண்ணியம் மீது இருக்கும் புரிதல் திருமணத்தை விட கொடுமையானது. பெண்ணியவாதி என்பவள் புகை பிடிப்பவள், மது அருந்துபவள், எந்த ஆண் மகனுடனும் காமம் கொள்ள நினைப்பவள்.இப்படியெல்லாம் நீங்கள் என்னை பற்றியும் சொல்விர்கள் எனில் நானும் பெண்ணியவாதி தான் ஆனால் நான் புகைக்கமாட்டேன், மது ஒழிக்கவேண்டும் என்று பெரிதும் ஆசைப்படுபவள். நான் அன்பு செய்யும் ஆணுடன் மட்டுமே காமம் கொள்ள ஆசைப்படுபவள். நீங்கள் சொல்லும் பெண்ணியவாதி எனும் புரிதலும் ஆண்கள் உருவாகியதே எனவே அதுவம் நிச்சயம் பெண்ணுக்கு எதிராகவே இருக்கும். என் வெறுப்பு திருமணம் என்ற கட்டமைப்பு மீது, அதன் பெயரில் பெண்களை முடக்குவது குறித்து மட்டுமே தவிர ஆண்கள் மீது அல்ல.அன்பு நிரம்பிய விழிகளுடன் ஒரு ஆண் என் மீது படர்ந்திருக்கவேண்டும் அவனின் கண்களும் மனமும் என்னை, என் பெண்மையை பிரதிபலிக்கவேண்டும் என்றே ஆசைக் கொள்கிறேன். ஆனால் எத்துனை ஆண்கள் தங்கள் இணையை, தோழியை அவளின் பெண்மையுடன் நேசிக்கின்றனர். பெண்மை என்று நான் சொல்ல விளைவது நம் சமுகம் வரையறுத்திருக்கும் பெண்மை அல்ல, ஒரு பெண்ணின் ஆசை, லட்சியம், கனவு, சுயம் இதுவே ஒரு பெண்ணின் பெண்மை என்று சொல்லுகிறேன். அதேப்போல் ஒரு ஆணும் பெண்ணும் பேசி பகிர்ந்து கொண்டாலே அந்த உறவு திருமணத்தில் தான் முடிய வேண்டும், அது காதல் தான் என்ற எதிர்ப்பார்ப்பை என்றைக்கு உடைக்க போகிறோம். மழை வேண்டி மனிதனுக்கும் விலங்குக்கும் திருமணம் செய்யும் சமுகம் சாதி பெயர்களை சொல்லி மனிதர்களுக்குள்ளான திருமணங்களை எதிர்கிறது, மீறும் பட்சத்தில் கொலைகள் செய்யவும் துணிகிறது. இன்னும் காதல் திருமணமே பெரும் குற்றமாய் இருக்கும் ஒரு சமுகத்தில் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்வதென்பது மாபெரும் குற்றமே, அவமானத்துக்குரிய பாவசெயல். மனிதனாய் பிறந்த எல்லோருமே அன்புக்கு தான் அதிகமாய் ஏங்குகிறோம்.பணம், உறவு, சாதி, மதம், மொழி, இனம் என்று எல்லாமே கிட்டும் நமக்கு மனிதமும், அன்பும் கிடைப்பது மட்டுமே பெரும்பானைமை நேரங்களில் அறிதாகிவிடுகிறது. அதே சமயம் பல நேரங்களில் அன்பு எனும் பெயரில் வன்முறைகள் நடந்தேறுகிறது. இதுனாலே மனம் குடும்பம், திருமணம் எனும் அமைப்புகளை விட்டு விலகி நிற்க ஆசைக்கொள்கிறது.

திருமணம் குறித்தான ஆசைகள் எப்போதும் வெறுமையாகவே உள்ளது அதே நேரம் என் பிள்ளைகளுக்கான உலகம் ஒவ்வொரு நாளும் மலர்ந்து கொண்டே இருக்கிறது. எல்லா வகையான முரண்பாடுகளை கடந்தே என் பிள்ளைகளை வளர்க்க ஆசைக்கொள்கிறேன். நம் சமுக அமைப்பில் குழந்தைகள் மீதான பெரும் வன்முறை கல்வி.கல்வி என்ற பெயரில் குழந்தை பருவத்தையே பறிக்கும் அந்த கொடுமையை என் குழந்தைக்கு தர துளியும் விருப்பமில்லை. அவர்கள் அவர்களாக வளரவேண்டும். நான் என் பெயர் குறித்து என் அம்மாவிடம் எப்போதும் சண்டைப்போடுகிறேன். என் பெயருக்கான அர்த்தம் தெரியாதது எனக்குள் எப்போதும் பெரும் வருத்தமாய் நீடிக்கிறது. நானே எனக்குள் என் பெயர் குறித்தான பல கற்பிதங்களை உருவாகிக்கொள்கிறேன். என் பெயர் குறித்து யாரவது கேட்டால் நான் எனக்குள் கற்பித்துக்கொண்டதை கேட்டவரும் நம்பும்படி செய்கிறேன். என் பிள்ளைகளுக்கான பெயர்களை இலக்கியங்களில் தேடிக்கொண்டே இருக்கிறேன். "அன்னா கரீனா" என்றோ, "ரஸ்கால்நிகோவ்" என்றோ. மிகபெரும் படைப்பாளியான "அன்டன் செகாவ்" என்றோ பெயர் சூட்ட விருப்பம். இன்னும் பெயர்களுக்கான தேடல் நீண்டுக்கொண்டே இருக்கிறது. என்ன பெயர் சூட்டினாலும், பாலினத்தை கடந்து "நிலா" என்றே அழைக்க ஆசை கொள்கிறேன். எல்லா குழந்தைகளும் படைப்பாளிகள் தான், அறிவாளிகள் தான் ஆனால் கல்வி அவர்கள் அறிவை, படைப்பு திறனை மழுங்கடித்துவிடுகிறது. ஒரு குழந்தை தான் முதன் முதலில் எழுதும் "அ" எனும் எழுத்திற்கு முன் பல நூறு உலகம் காணாத, யோசிக்காத ஓவியங்களை வரைந்துவிடுகிறது. "அம்மா" எனும் சொல்லை சொல்லும் முன் பல நூறு புதிய பாடல்களை, மொழிகளை படைக்கிறது. ஆனால் "அ"வும், "அம்மா"வும் அக்குழந்தையின் அறிவினை அழித்துவிடுகின்றன என்பதே நிஜம். நம் கல்வி குழந்தையை கொலை செய்துவிடுகிறது. வெறும் மதிப்பெண் பெரும் இயந்திரங்கள் நாளை பணம் பெரும் இயந்திரங்களாய் மாற வளர்க்கப்படுகின்றனர். என் நிலா "மதிப்பெண்" என்று முட்டி மோதி போராடுவதை என்னால் கனவிலும் யோசிக்க முடியவில்லை. என் நிலாவிற்கு கல்வி என்னிடமிருந்தே தொடங்கட்டும் நான் படித்த புத்தகங்கள், ரசித்த கலைகள் அவற்றிலிருந்து நிலா கற்றுக்கொள்வாள்/கற்றுக்கொள்வான். புத்தகங்களிலிருந்தும், கலைகளிலிருந்தும், மனிதர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ளாத எதை ஒரு குழந்தைக்கு இந்த இருநூறு வருட பழைய கல்வி முறை கொடுத்துவிடும். விருப்பப்படும் மொழிகளை கற்றுக்கொள்ளட்டும், விருப்பப்படும் படிப்புகளை படிக்கட்டும். ஒரு நல்ல தோழியாய் என் நிலாவிற்கு வழிக் காட்டுவேனே தவிர இதை தான் நீ செய்ய வேண்டும் என்று திணிக்க விரும்பவில்லை. பாசம் எனும் பெயரில் உணர்வுகளை பாதிக்கும் வன்முறைகளை தொடுக்க விரும்பவில்லை, செய்யவும் மாட்டேன். நிலவிற்கான உலகம் அவளுடையது. ஒரு கணித மேதையாய், ஆசிரியராய், நடிகராய், படைப்பாளியாய் எப்படியேனும் இருக்கலாம் ஆனால் எல்லாவற்றையும் தாண்டி மிக உன்னதமான மனிதனாய் இருக்க வேண்டும் என்பது மட்டுமே என் எதிர்பார்ப்பு. நெருப்பு சுடும் என்று யாரோ சொல்வதை கேட்டு நெருப்பை தீண்டாமல் இருக்கதேவையில்லை, நெருப்பு என்றால் இதுதான் அது இப்படிதான் இருக்கும், இதுபோலான வினைகளை புரியும் என்று உணரவேண்டும் என்றே ஆசைக்கொள்கிறேன். எல்லாவற்றையும், எல்லா மனிதர்களையும் நேசிக்க சொல்லித்தருவேன். நிலாவை தூக்கிக்கொண்டு உலகம் சுற்றுவேன்.நிலா முறையான பள்ளி கல்வியில் பயிலவேண்டும் என்று அவசியமில்லை அது நிலாவின் உரிமை.இசையும், கலைகளும், புத்தகங்களும் என்றைக்கும் துணையாக இருக்கும், பயணங்கள் மனிதார்களை அறிமுகப்படுத்தும்.

பயம், வெறுப்பு, கோபம், துரோகம், ஏமாற்றம் இவையெல்லாம் இல்லாமல் என் குழந்தை வளரும் ஆனால் இவை எல்லாம் இல்லாமல் எப்படி ஒரு மனிதன் உருவாக முடியும்? அவை எல்லாவற்றையும் இச்சமுகம் வாரி வாரி கொடுக்கும். கடவுள், சாதி.இவை எல்லாம் என்னவென்றே தெரியாத குழந்தையை கண்டிப்பாக சமுகம் ஏற்றுக்கொள்ளாது,ஒதுக்கி வைக்கவே முயற்சி செய்யும், சமுக பாகுப்படுகளை புறம் தள்ளி மனிதனாய் நிற்க முயற்சிக்கும் மனிதனாகவே நிலா இருப்பாள்/இருப்பான். சமுகம் போற்றினாலும் தூற்றினாலும் அரவணைத்து கொள்வதற்கு எப்போதும் வீடு திறந்தே இருக்கும். நிலா எப்படி வளர்ந்தாலும், எத்துனை முறை தோற்றாலும், எத்துனை முறை ஏமாந்து நின்றாலும், எத்தனை முறை விழுந்தாலும் அது என்னுடைய நிலா. நிலவிற்காக எப்போதும் அவள் வீடு காத்துகிடக்கும். இந்த சமுகம் வஞ்சம், துரோகம், பொறாமை என்று எத்துனை கத்திகளை வீசினாலும் நிலா அனைத்தையும் அன்பால் கடப்பாள்/கடப்பான். அவளின் கண்ணீர் துளிகளை துடைக்க என் கரங்கள் என்றும் காத்துக்கிடக்கும்.என் நிலாவிற்கு அன்பை மட்டுமே தருவேன். ஒருவரின் அன்பு தானே இன்னொருவர் வாழ்வதற்கு நம்பிக்கை தருகிறது. அந்த நம்பிக்கையை தருவேன். என் நிலா அவள்/அவன் வாழ்க்கையை மட்டுமே வாழ்வான்/வாழ்வாள்.! யாரின் எதிர்பார்புகளையும் சுமந்து கொண்டு எனக்கான வாழ்க்கை என்று வாழ்க்கையை சமரசம் செய்துக்கொண்டு வாழத்தேவை இருக்காது. நிலாவின் சுயம் ஒரு போதும் எனக்கு பிரச்சனையாக தெரியாது.

நிலா வளர்வதை ஒவ்வொரு நாளும் ரசித்துக்கொண்டே இருப்பேன். என் குழந்தை பேசிய மொழியற்ற முதல் வார்த்தை என் நாட்குறிப்பில் இருக்கும், பேசிய முதல் நாள், நடக்க தொடங்கிய முதல் நாள், நட்பென்று அறிமுகம் செய்து வைத்து நிலாவாய் உருவாக்கி கொண்ட முதல் உறவு என்று எல்லவற்றையும் என் நாட்குறிப்புகளிலும், புகைபடங்களிலும் நிலைத்து நிற்கும். நிலா நிலாவாக வாழ்வாள்/வாழ்வான். உறவுகள் சுமையாக கருதும் வலியை நான் ஒரு போதும் நிலாவிற்கு தரமாட்டேன். என் நிலாவிற்கு என் முத்தங்கள். இன்றைக்கும் எப்போதும் எந்நிலையிலும், எந்த வயதிலும்..

ஆனால் இக்கனவுகளை தாண்டி எதார்த்தத்தில் திருமணமும், சமூகமும் என் கனவுகளுக்கும், நிலாவுக்கும் எதிராகவே இருக்கிறது.

2 comments:

  1. ஆர்த்தி..அழ வைத்து விட்டீர்கள்..கனவு கர்ப்பத்தில் வளரும் நிலாவுக்கு என் அன்பு முத்தங்கள்..

    ReplyDelete
  2. குடிகாரனிடம் நிறைய அனுபவங்கள் கொட்டிக்கிடக்கிறது என்றால் அந்த குடிகாரனையே கட்டி அழுங்கள்... வாழ்த்துக்கள்...
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete